"மக்களைத் தேடி மருத்துவம்" கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2363

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவர் தொடக்கி வைக்கிறார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்கின்றனர். இதுபோன்ற நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும், வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

நாட்டிலேயே தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தொடர்ந்து இரண்டாவது பயனாளியின் வீட்டிற்குச் சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களின் பயன்பாட்டுக்காக 3 புதிய வாகனங்களை மக்களுக்கு அர்ப்பணித்து, அவற்றைத் தொடக்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக ஆயிரத்து 172 துணை சுகாதார மையம், 189 ஆரம்ப சுகாதார மையம், 50 சமுதாய நல வாழ்வு மையம், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட இடங்களில், 257 கோடி ரூபாய் செலவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments